554. "சிக்க" திருப்பதி !
பொங்கல் விடுமுறையில் குடும்ப சகிதம் பங்களூரு சென்றிருந்தேன். வெண்களத்துக்கு (அதாங்க ஒயிட்ஃபீல்டு) அருகில் ஒரு ஹோட்டலில் வாசம். மூத்தவள் ரொம்ப நாளாகப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த விஸ்வேஸ்வரா மியூசியத்திற்கு விஜயம். நான் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்றதாக ஞாபகம். கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.இடுகையில் உள்ள படங்களை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.
பல அறிவியல் விதிகளை விளக்கும் காட்சிகள்/மாடல்கள், புராதனப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், அந்தக்காலத்து நீராவி எஞ்சின், ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் மாடல் என்று பல விஷயங்களை பார்க்க முடிந்தது.
ஜுராசிக் பார்க் படத்தில் பார்த்ததைப் போன்ற (சற்று அளவில் சிறிய) டைனோசர் ஒன்று நிமிடத்திற்கு ஒரு முறை தலையையும் வாலையும் ஆட்டி "எனக்கு சாப்பாடு போடுவியா மாட்டியா?" என்ற வகையில் ஒரு அறையில் உறுமிக் கொண்டிருந்தது!
சரி, இடுகையின் தலைப்பு மேட்டருக்கு வருவோம்! நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் சிக்க திருப்பதி என்ற கோயில் இருப்பதாக கேள்விப்பட்டு, பெருமாளை பார்க்காமல் போனால் அவர் கோச்சுப்பாரே என்ற எண்ணத்தில், அங்கு செல்ல முடிவெடுத்தேன். Hope Farm என்ற நிறுத்தத்திலிருந்து சிக்க திருப்பதிக்கு பஸ் போவதாக ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் ஹேளியருளினாள். நடக்கும் தூரம் தான் என்றும் கூறினாள்.
பெருமாள் சோதிக்க ஆரம்பித்தார். ஹோப் ஃபார்ம் எந்தப்பக்கம் என்று நான் விசாரித்த யாருக்கும் தெரியவில்லை! சற்று ஆங்கிலப் பரிச்சயம் உடைய புண்ணியவான் ஒருவர், 'ஹோப் ஃபார்ம் என்று கேட்கக்கூடாது, ஓ-ஃபார்ம் என்று கேட்டால் தான் இங்கு புரியும்' என்று என் தத்துவ விசாரத்துக்கு மாபெரும் முற்றுப்புள்ளி வைத்தார்! 'சே, ஹோப் ஃபார்ம் என்பதற்கு கன்னடத்தில் ஓ-ஃபார்ம் என்று கூட அறியாத ஜடமாக இருக்கிறோமே' என்று ஆற்றாமையாக இருந்தது!
ஓ-ஃபார்ம் பஸ் நிறுத்தத்தில் கலர்ச்சட்டை அணிந்த நபர் ஒருவரிடம், சிக்க திருப்பதி பஸ் பற்றி விசாரித்ததில், வழக்கமாக வரும் பஸ் அன்று லேட் என்று கூறினார். நம்பர் இல்லாத பஸ் ஒன்று வர, கலர்ச்சட்டைக்காரர் 'பன்னி பன்னி' (பன்னி என்றால் கன்னடத்தில் வாங்க என்பதை அறிந்ததால் அவர் என்னைத் திட்டவில்லை என்று திடமாக புரிந்தது!) என்று தானும் பஸ்ஸில் ஏறிக் கொண்டு, 'எத்தனை டிக்கட்?' என்றார்! அவர் தான் நடத்துனர் என்பது உரைத்தது. பஸ் நிறுத்தத்தில் பயணிகளோடு பஸ்சில் ஏறும் நடத்துனரைப் பார்க்க அதிசயமாக இருந்தது.
பணத்தைப் பெற்றுக் கொண்டு, பில் புத்தகம் மாதிரி இருந்த நோட்டிலிருந்த ஒரு மஞ்சள் கலர் சாணிப் பேப்பரில் தொகையை எழுதி, கிழித்து என்னிடம் கொடுத்தார். இந்தியாவின் சிலிக்கன் வேலிக்கு (Valley) அருகில் உள்ள ஒரு இடத்தில் டிக்கட் கொடுக்கும் அழகைப் பாருங்கள்! "சிக்க திருப்பதி போக இந்த டிக்கட் போதுமில்லையா?" என்று வினவியதற்கு, 'இதை வைத்துக் கொண்டு நேரா வைகுண்டம் வரை போகலாம்' என்பது போல ஒரு புன்னகையை அருளி என்னை ஆசுவாசப்படுத்தினர்! பஸ்சில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சாலையும் அத்தனை மோசமில்லை. சாலையோரப் பசுமை, சில்லெனக் காற்று என்று 25 கிமீ பயணம் மனதுக்கு ரம்யமாகவே அமைந்தது.சிக்க திருப்பதி போய் சேர்ந்தோம். பெயருக்கு ஏற்றாற்போல, அழகான, "சிக்க" கோபுர தரிசனம்! கோயிலில் கூட்டமும் "சிக்க" தான்! அர்ச்சனை தட்டு வாங்கிய கடையில் இருந்த பெண்மணி, 2 தேங்காய்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார். ஏன் என்றதற்கு, 'பெருமாளுக்கு ஒன்று, லஷ்மிக்கு ஒன்று' என்று கூறி ஒரு பேருண்மையை எனக்குப் புலப்படுத்தினார். சரி, இவ்வளவு தூரம் வந்தாயிற்று, புண்ணியத்தின் முழுப்பலனை ஒரு 10ரூ தேங்காயினால் தவற விடக்கூடாது என்று 2 தேங்காய்களை வாங்கினேன்.
கோயில் உள்ளே நுழைந்தவுடன், ஒரிஜினல் திருப்பதி போலவே, சிக்க திருப்பதியையும் வடகலையார்கள் டேக் ஓவர் பண்ணியிருப்பது விளங்கியது :-) கோயிலில் அர்ச்சனை டிக்கட் வாங்கிக் கொண்டு, மூலஸ்தானத்திற்குள் செல்ல வழி கேட்டபோது, கோயில் ஆசாமி, ஒரு பெரிய கல் மேடையைக் காட்டி, 'தேங்காய்களை நீங்களே உடைத்து அர்ச்சனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்றார். 'நாங்களே தேங்காயை உடைக்க வேண்டுமென்றால், அர்ச்சனை டிக்கட் எதற்கு?' என்று கேட்க நினைத்தேன். என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட என் மனைவி, "கோயிலில் எதையாவது ஆரம்பிக்காதீர்கள்! வீட்டில் தான் கையசைப்பதில்லை, போய் தேங்காய்களை உடைத்துக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். கோயில் ஆசாமி சிரித்தது போலத் தோன்றியது என் பிரமையாகவும் இருக்கக் கூடும்! 2 தேங்காய்கள் 4 ஹெமிஸ்பியர்கள் ஆயின! பெருமாள் சன்னதிக்குள் நுழைந்தோம்.
"எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள்" என்று திருமங்கையாழ்வாரை மனமுருக, பக்திப் பரவசத்துடன் பாட வைத்த எம்பெருமான் "சிக்க" திருவேங்கடமுடையானின் (ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன்) "தொட்ட" திவ்ய தரிசனம் கிட்டியது! கண் குளிர சேவித்தோம். திருமலைப் பெருமாளின் மினியேச்சராக இருந்தார், சிக்க திருப்பதி நாயகன்! "ஜருகண்டி" என்று யாரும் பிடித்துத் தள்ளாததால், ஒரு 7-8 ஆழ்வார் பாசுரங்களை நிதானமாக சொல்ல முடிந்தது.
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே!ஹோட்டலுக்கு மீள்பயணம் மேற்கொள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தோம். கூட்டமாக ஒரு பஸ் வந்தது. கண்டக்டர் கீழே இறங்கி, '2 மணி நேரத்திற்குப் பின் தான் அடுத்த ஒயிட்ஃபீல்ட் பஸ்' என்று காப்ரா பண்ணியவுடன், என் மனைவி மகள்களைக் கூட்டிக் கொண்டு சட்டென்று பஸ்சில் ஏறி விட்டார்! அம்போவென்று நின்றிருந்த என்னையும் பஸ்சுக்குள் திணித்து, கண்டக்டர் பின்னால் ஏறிக் கொண்டார்!
நல்ல வேளை, 2 நிறுத்தங்களுக்குப் பின், எனக்கும், என் மகள்களுக்கும் உட்கார இடம் கிடைத்து விட்டது. மனைவிக்குக் கிடைக்கவில்லை! சிக்க திருப்பதி பெருமாள் சங்கல்பம் அப்படி இருந்தால் நான் என்ன செய்ய முடியும் :-) பக்கத்தில் இருந்த கிராமத்து ஆசாமியிடம் "ஓஃபார்ம் ஸ்டாப்பிங்க் சொல்ப ஹேள்பிடி" என்று கூறி என் கூரிய கன்னட அறிவை பிரகடனப்படுத்திக் கொண்டேன்! இப்பயணத்தில் வெள்ளந்தியான, உதவும் குணம் கொண்ட கிராமத்து மனிதர்கள் பலரைக் கண்டதும் மனதுக்கு இதமாக இருந்தது.
அது வரை, தன் கன்னட மொழியறிவை பயன்படுத்தாத (நன்றாக கன்னடம் பேசக்கூடிய) என் மனைவி, கண்டக்டருடன் அளவளாவி, பஸ் எங்களை ஹோட்டல் வாசலிலேயே இறக்கி விடும்படி ஒரு ஏற்பாடு செய்து விட்டார்! இப்படியாக சிக்க திருப்பதி பயணம் இனிதே நிறைவடைந்தது!
எ.அ.பாலா